Sunday, January 13, 2013

ரிஸானாவை வெளிநாட்டுக்கு அனுப்பியவர்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமாம் - சொல்கிறார் அம்ஜத்

ரிஸானாவை மிகக் குறைந்த வயதில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பிய வஞ்சகர்களுக்கு எதிராக மரண தண்டனை வழங்க வேண்டுமென்று தான் கேட்டுக்கொள்வதாக மேல் மாகாண சபை உறுப்பினர் எம். எம். எம். அம்ஜத் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக அம்ஜத் வழங்கியுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் ரிஸானா நபீக் சிறுமிக்கு ஸவூதி அரசு வழங்கியுள்ள மரண தண்டனை விடயத்தில் முழு உலகும் கவலைகொண்டுள்ளது. இது வழங்கப்படக்கூடாதொரு தண்டனை. இலங்கையின் அரசுத் தலைவர் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைகள் ஆணைக்குழு பலவும் இந்த மரண தண்டனயை நீக்குமாறு பலமாகக் கேட்டுநின்ற போதும், ஸவூதி அரசாங்கம் அவற்றில் எதனையும் கருத்திற் கொள்ளாது வழங்கிய இந்த மரண தண்டனையை நீதிக்கு அடிபணிகின்ற இயல்புரீதியான எந்த ஒரு மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

எது எவ்வாறாயினும் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அரசு என்ற முறையில் இப்போது செய்யவேண்டியது என்னவென்றால், சிறுமி ரிஸானாவை போலி ஆவணங்கள் தயாரித்து சிறுவயதில் வெளிநாட்டுக்கு அனுப்பிய நயவஞ்சக முகவர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாகும். அவ்வாறு செய்யத் தவறினால், இவ்வாறான பயங்கர விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ரிஸானாக்கள் இந்நாட்டிலிருந்து மென்மேலும் உயிர்ப்பிக்கப்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது போகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment