Thursday, January 17, 2013

டெல்லி மாணவியின் கற்பழிப்பைத் தொடர்ந்து மேலும் இரு இந்தியச் சிறுமிகள் உருக்குலைப்பு செய்யப்பட்ட அவலம் வெளியானது.

டெல்லியில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த சோகமும் அதிர்ச்சியும் மறையாத நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் உத்தரபிரதேச மாநிலத்திலும் இரண்டு சிறுமிகள் காடையர்களால் மிகவும் மோசமான முறையில் கற்பழிக்க்பபட்ட சம்பவம் வெளி உலகிற்கு வெளிவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி 11 வயது சிறுமி பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென அங்கு வந்த 6 பேர் அந்த சிறுமியை பலவந்தமாக மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்று மாறி மாறி கற்பழித்தனர். அதன் பிறகு அவளை கொடூரமாக தாக்கினர். இதில் அந்தச் சிறுமி உறுப்புகள் சிதைந்து மயக்கம் அடைந்தாள்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு குற்றுயிராகக் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை சிலர் ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. லான் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழு தலைவர் டாக்டர் அகர்வால் இதுபற்றி கூறியதாவது:-

சிறுமியைக் கற்பழித்த கும்பல் அவளை ஈவு இரக்கமின்றி காட்டு மிராண்டித்தனமாக தாக்கி உள்ளது. இதனால் அவளது அந்தரங்க உறுப்புகள் மோசமாக சிதைக்கப்பட்டுள்ளன.

பிறப்புறுப்புக்கும் மலம் கழிக்கும் இடையே உள்ள சதைப்பகுதி முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளதால் அவளது பெருங்குடல் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை வெட்டி எடுத்து உடல் கழிவை அகற்ற மாற்றுப் பாதையை உருவாக்க வேண்டியுள்ளது.

இதற்காக ஒரு சிறப்பு அறுவை சிகிச்சையும் மற்றும் 6 அறுவை சிகிச்சைகளும் தேவைப்படுகின்றன. முடிந்த வரை முயன்றிருக்கிறோம். என்றாலும் சிறுமியின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. என்றார்.

அந்த சிறுமி பீகார் மாநிலத்தை சேர்ந்தவள் தர்பங்கா பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரி கள் மற்றும் ஒரே ஒரு சகோதரன். சிறுமியின் தந்தை இறந்து விட்டதால் ராஜஸ்தானுக்கு வறுமை காரணமாக வேலை தேடி தனது தாயுடன் வந்தாள். அவர்கள் சிகார் பகுதிக்கு வந்த போதுதான் சிறுமி கற்பழிக்கப்பட்டாள்..

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசிடம் புகார் மனு கொடுத்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அங்குள்ள ஒரு சமூக அமைப்பினர் போராட்டத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கேலாட்டுடன் இதுதொடர்பாக பேசினார். அதன் பிறகே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் அரசியல் செல்வாக்கு காரணமாக போலீசார் அவர்கள் மீது கடுமையான வழக்கு எதுவும் பதியவில்லை. இதனால் 2 பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் ஷந்தாவுலி மாவட்டம் தான்பூர் பகுதியில் சிறுமியை 2 பேர் கற்பழித்துள்ளனர். சிந்து யாதவ் என்பவன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை ஒரு வாய்க்கால் பகுதிக்கு இழுத்துச் சென்று கற்பழித்துள்ளான்.

இதில் சிந்து யாதவ் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றொருவன் தப்பி விட்டான். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment