எமது நாட்டுக்கு எதிராகத் தோன்றியுள்ள இராஜதந்திர நெருக்கடிக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸே பொறுப்பானவர் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு மிகவும் அயல்நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேண வெளிவிவகார அமைச்சர் தவறிவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது இலங்கைக்காக பேச வேண்டிய தனது கடமையிலிருந்து ஜி.எல்.பீரிஸ் தவறிவிட்டார் எனவும் ஐ.தே.க எம்.பி சுட்டிக்காட்டினார்.
தென்னிந்தியாவுடனான பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு ஒரு அமைச்சரால் கூட இந்தியாவுக்கு போக முடியாத பரிதாபகரமான நிலையில் எமது நாடு இருப்பதாகவும் ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.
தமது சுய அரசியல் இலாபத்துக்காகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும் தி.மு.க தலைவர் கருணாநிதியும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டார்.
2009 இல் யுத்தம் முடிந்த பின் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டிருந்தால் தற்போதைய நெருக்கடி ஏற்பட்டிருக்காது எனவும் ஹரின் குறிப்பிட்டார்.
ஐ.தே.க இந்த நெருக்கடி நிலையில் ஏன் அரசாங்கத்துக்கு உதவி செய்யவில்லை? எனக் கேட்டதற்கு பதிலளித்த ஹரின் எம்.பி, தனது கட்சி உதவி செய்ய முன்வந்த போது அரசாங்கம் அதை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment