தமிழர் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தது, அதன் பின்னர் அவர்கள் புலன் பெயர்ந்தது, தடம்புரண்டது என மாற்றங்கள் பல. இந்நிலையில் சுவிற்சர்லாந்தில் தமிழர் தங்கள் அழகு ராணியை தேடுறாங்கள் என அந்நாட்டு பத்திரிகையான 20 மினுட்டன் தெரிவிக்கின்றது. தெரிவு செய்யப்படவிருக்கின்ற அழகுராணிக்கு மிஸ் தமிழ் சுவிற்சர்லாந்து எனப்பெயராம் (அதாவது சுவிற்சர்லாந்து தமிழ் அழகுராணி எனலாம்) இந்த அழகுராணிப்போட்டியில் பங்குபற்றுபவர்களின் தாய் அல்லது தந்தை இலங்கையராவும் தமிழராகவும் இருக்க வேண்டுமாம். தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டுமாம். வயது 16-25 வரையாம். இறுதி தெரிவு 27 ஏப்ரலில் இடம்பெறவுள்ளதாம்.தமிழர் கலாச்சாரத்திற்கு புதியதான இக்கைங்கரியத்தினை முன்னெடுக்கின்ற அமைப்பின் நடாத்துனரான சிறிதரன் என்பவர் 20 மினுட்டன் பத்திரிகைக்கு தெரிவிக்கையில் „எங்களுடைய கலாச்சாரத்தில் பெண்களுக்கு இவ்வாறானதோர் சந்தர்ப்பம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர்களை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் இந்த வாய்ப்பினை வழங்குகின்றோம்' எனக் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து 300 க்கு மேற்பட்ட இனங்களை சேர்ந்த மக்கள் இணைந்து வாழுகின்றதோர் நாடு. அந்த நாட்டிலே வருடாந்தம் மிஸ் சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்படுவார். அந்நிகழ்வில் அங்குவாழுகின்ற சகல நாடுகளையும் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்வர். அந்நாட்டிலே பிறநாடுகளை பூர்வீகமாக கொண்ட அழகிகள் மிஸ் சுவிற்சர்லாந்தாக தெரிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் நிறையவே உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் மேற்படி புதிய செயற்பாடானது தமிழருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர். இசைந்து போதல், இணைந்து வாழுதல் போன்ற மனித பண்புகள் அற்றதோர் சமூதாயமாகவே தமிழர் வாழ விரும்புகின்றனர் என்பதையும் அவர்கள் பிரிவினையையே நாடிநிற்கின்றனர் என்பதையும் இச்செயற்பாடு உணர்த்தும் எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது வயிற்றுப்பிழைப்பிற்காக ஒரு சமுதாயத்தின் கலைகலாச்சரத்தினை விலைகூறி விற்பது மாத்திரமல்ல தஞ்சம்கோரிச் சென்ற நாடு ஒன்றின் ஒற்றுமைக்கும் இவர்கள் தீங்கு விளைவிக்கின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அழகுராணிகளின் எதிர்பார்ப்புக்களை இந்த வீடியோவில் பாருங்கள்.

No comments:
Post a Comment