நான் வாக்குறுதி வழங்குகிறேன் -
என் தாயின் பெயரால்,
என் மகளின் பெயரால்,
என் சகோதரியின் பெயரால்,
இன்னும்,
பிரெஞ்ச் நீதிமன்றில்
பரிதாபமாய்க் கொல்லப்பட்ட
பெயர் தெரியா முஸ்லிம் பெண்ணின் பெயரால்,
இன்னும்,
ஒக்ஸ்போர்ட் வளாகத்திலும்
தேம்ஸ் நதியின் ஓரத்திலும்
வெனிசின் படகிலும்
பைசா கோபுரமருகிலும்
இன்னும்,
தெருக்களிலும் சந்துகளிலும்
சொந்த வீடுகளிலும் கூட
தம் ஆடை குறித்த அச்சத்தில்
ஒடுங்கி, ஒதுங்கி நிற்கும்
முஸ்லிம் மங்கையரின் பெயரால்
நான் வாக்குறுதி வழங்குகிறேன்!
நான் வாதிட விரும்பவில்லை,
அழகை மறைத்தல் பற்றியோ
மறைத்தலின் அழகு பற்றியோ
உங்களுடன் வாதிடுதல்
அர்த்தமற்றது என்பதால்.
என் தலை மூடும் சேலைத் தலைப்பு
நெஞ்சை மறைக்கும் முந்தானை
பாதம் தழுவும் ஆடையின் கீழ்முனை
சற்றே அசையினும்,
என் உடல் பதறிக் கூசுதலை
அறியமாட்டீர் ஒருபோதும்.
எனக்குப் புரியவில்லை –
என் உடல் மறைப்பு உங்களை ஏன் காயப்படுத்துகிறது?!
என் ஆடை அகற்றுவதில் உங்களுக்கேன் இத்துணை ஆர்வம்?
! அருட்சகோதரிகளும் பிக்குணிகளும்
இன்னும்
அத்தனை மதங்களின்
உத்தமப் பெண்களும்
ஆடையால் தம்மை முழுதாய் மறைக்கையில்
ஏழைப் பெண் என் உடை மட்டும்
ஏன் உங்களை வருத்துகிறது?!
ஒருவேளை –
உங்கள் பெண்களின் உடல் பார்த்து
அலுத்து விட்டதா உங்களுக்கு?
எங்கள் உடல் பார்க்கும் ஆவல்
அழுத்துகிறதா உங்களை?
இருப்பின் -
என் தலைமை ஆண்மையிழந்திருக்க,
என் அரசு மௌனமாயிருக்க,
என்னைச் சுற்றிலும் ஆன்மா இழந்தவர்களாய் ஆண்களிருக்க,
என் இனத்துப் பெண்களினதும்
இன்னமும் பிறவா என் பெண் சந்ததியினதும்
என்றைக்குமான காப்புறுதிக்காய்
நான் வாக்குறுதி வழங்குகிறேன்:
மறைத்துள்ள என் ஆடைகளை அகற்றவும்
மேலும் நீங்கள் நிர்ப்பந்திப்பின்,
என் நிர்வாணம் காட்டவும்
நான் உடன்படுகிறேன்!
- அஷ்ரபா நூர்தீன்
No comments:
Post a Comment