Tuesday, March 26, 2013

‘இலங்கை தேவ சபை’ க்கு எதிராக பிக்குமாரின் ஆர்ப்பாட்டம்!

சட்ட விரோதமான முறையில் கொட்டாவை நகருக்கு அண்மித்து நடாத்தப்பட்டுவருவதாகக் கூறப்படுகின்ற இலங்கை தேவ சபை எனும் பெயரில் இயங்கும் மத வழிபாட்டத் தலத்தை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார் உள்ளிட்ட பிரதேசவாசிகள் நேற்று, அவ்விடத்திற்குச் சென்று தங்களது பலத்த எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

அந்த மத வழிபாட்டுத்தலம் ஒரு வருடத்திற்கும் மேலாக இங்கு இயங்கிவந்துள்ளது. அது எந்தவொரு சட்டபூர்வமான சங்களுக்கும் உரியதாகவோ, பதிவு செய்யப்பட்டதாகவோ இல்லை என்பதால், தொடர்ந்தும் நடாத்திச் செல்ல அனுமதியளிக்க முடியாது என எதிர்ப்பில் கலந்துகொண்டோர் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேரர்கள் உள்ளிட்ட எதிர்ப்பாளர்கள் கொட்டாவை பொலிஸில் இதுபற்றி அறியக் கொடுத்து, அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு கோரியுள்ளனர்.

தேவ சபையைச் சூழ்ந்து கொண்ட எதிர்ப்பாளர்கள் தேவ சபையைச் சார்ந்தோர் அவ்விடத்தை விட்டும் வெளியேறுவதற்காக 10 நிமிட அவகாசம் அளித்தனர். ஆயினும், அதனைக் கருத்திற் கொள்ளாத தேவ சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் தமது ஆராதனையில் கண்ணும் கருத்துமாக இருந்ததனால், எதிர்ப்பார்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அவிசாவளை -கொழும்பு பிரதான வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பைக் காட்டினர். இதனைத் தொடர்ந்து பாதையில் நெரிசல் ஏற்பட்டு வாகனப் போக்குவரத்து சற்று நேரத்திற்கு ஸ்தம்பிதமடைந்தது. உடனே பொலிஸார் செயலில் இறங்கி, தேவ சபை உறுப்பினர்களை அங்கிருந்து அகற்றியதும், அவர்கள் குறித்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

(கேஎப்)

No comments:

Post a Comment