Wednesday, March 27, 2013

"கச்சத்தீவு உடன்படிக்கையை திரும்பப் பெற வேண்டும்" ஜெயலலிதா

கச்சத்தீவு உடன்படிக்கையை இந்தியா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார். அவ்வுடன்படிக்கை இந்திய அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் செவ்வாய் 26.3.13 கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர் எனக் குறை கூறி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளிக்கையில் அவர் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கும்; துன்புறுத்தப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவிற்கான இலங்கைத் தூதரை அதிகாரியை நேரில் வரவழைத்து, இந்தியாவின் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பிரச்சினை குறித்து இந்தியா வலுவான நடவடிக்கைகளை ராஜதந்திர முறையில் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டதன் விளைவாய்தான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் இன்றளவும் தொடர்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது, தமிழக மீனவர்களின் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் எனில், கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடைத்திட வேண்டும், எனவே கச்சத்தீவு குறித்த இந்தியா – இலங்கை உடன்படிக்கை செல்லாது என தீர்ப்பளிக்க வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுத்ததையும் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நினைவுகூர்ந்தார்.

மத்திய அரசு தனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லையெனில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெற்றதைப் போல், கச்சத்தீவு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, வலுவான வாதங்களை முன் வைத்து சட்ட ரீதியாக இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Thanks BBC

No comments:

Post a Comment