Wednesday, May 1, 2013

தமிழ் ஈழம் அமைப்பதற்கு உதவி செய்தவர்கள் இன்று நாட்டை துண்டாட முயல்கின்றனர்-ஜனாதிபதி

எந்த அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்கும் தொழிலாளர்வர்க்கம் அரசுடன் இருக்கிறது, வீதிகளில் இறங்கி பந்தம் பிடிப்பவர்கள் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும் மின்பாவனையாளர்களில் 60 அலகுகள் மற்றும் அதற்கு உட்பட்ட அலகுகளைப் பயன்படுத்துவோருக்கு பழைய முறைப்படியே மின் கட்டணம் அறவிடப்படும். இவர்களுக்கான மின்கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

அதேநேரம் 180 மின் அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்து வோருக்கு நிவாரணம் வழங்கப்படவிருப்பதுடன் 90 அலகுகள் முதல் 95 அலகுகள் வரையான மின்பாவனையாளர்களுக்கு நிவாரணக் கட்டணத்தில் சீராக்கல் வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

பொரள்ளை கம்பல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்புக்களை வெளியிட்டார். மின்சாரக் கட்டண அதிகரிப்புத் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

மேலும் தமிழ் ஈழம் அமைப்பதற்கு உதவி செய்தவர்களும், நாட்டை துண்டாடுவதற்கு உதவி செய்தவர்களுமே இப்போது மின்சாரக்கட்டணம் தொடர்பாக மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றனர். கொத்மலை மின்சார உற்பத்தித்திட்டம், நுரைச்சோலை மின்உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினால் தமது அரசு கவிழ்ந்துவிடும் எனப் பயந்தவர்களே இப்போது மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது 65 வீதமான மக்களுக்கே மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 95 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளோம். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கும் அன்று மின்சாரம் இருக்கவில்லை.எமது ஆட்சியிலேயே இப்பகுதிகளுக்கு முதன்முதலில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த கால அரசாங்கங்கள் எத்தகைய செயற்பாடுகளில் இறங்கியபோதும் நாம் அதற்குப் பழிவாங்கவில்லை. அதனால்தான் மக்கள் எம்முடன் இருக்கின்றனர்.இந்த மேதின விழாவுக்கும், வடக்கு, கிழக்கிலிருந்து பெரும் மக்கள் வந்துள்ளமை அதனையே காட்டுகிறது. பிரபாகரனுடன் சேர்ந்து நாட்டைத் துண்டாடுவதற்குப் பாடுபட்ட இளைஞர்கள் இப்போது நாட்டைக் கட்டியெழுப்ப எம்மோடு இணைந்து வந்துள்ளனர். அதேநேரம் உலகின் எந்த அழுத்தங்களுக்கும் முகம்கொடுக்கக் கூடிய தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்துடன் உள்ளது. இந்தத் தாய் நாடு மேலும் பின்னடைவு காண்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. தொழிலாளர் வர்க்கம் அதற்குத் தயாராக இல்லை.

ஈழம் கோருவோருக்கு இடமளித்து மீண்டும் மரணத்துக்குக் கையசைப்பதற்கு நாட்டு மக்கள் தயார் இல்லை. தொழிலாளர் வர்க்கம் எம்முடன் உள்ளது என்பதை மேதினத்துக்கு வந்த மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.தொழிலாளர்கள் பற்றிப் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு இப்போது எதுவுமே இல்லை. தொழிலாளர்களுக்கான சகல நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்கி வருகிறது. எதிர்க்கட்சியினர் தமது காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர்.தொழிலாளர் வர்க்கமும் அதனை நன்கு அறியும். இப்போது வீதிகளில் இறங்கி பந்தம் பிடிப்பவர்கள் பற்றியும் மக்கள் அறிவர். எயார் லங்கா நிறுவனத்தை தனியாருக்கு விற்றவர்கள் யார் என்றும் மக்களுக்குத் தெரியும்.

இந்தத் தாய்நாடு பின்னோக்கிச் செல்வதற்கு தொழிலாளர் வர்க்கம் ஒருபோதும் இடமளிக்காது. இளைஞர்கள் தொழில் கேட்டு வீதியில் இறங்கிய யுகம் ஒன்று இருந்தது. எமது அரசாங்கம் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் சகல மாணவர்களுக்கும் தொழில் வழங்குகிறது. சுகாதாரம், கல்வி என சகலதையும் இலவசமாக வழங்குகிறது. பல்கலைக்கழகம் வரையான கல்வியை இலவசமாக வழங்குகிறது. இதெல்லாம் மக்களுக்குத் தெரியவில்லை. இதுதான் அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கும்போது தொழிற்சங்கங்களை வைத்துக்கொண்டதில்லை. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. அரசாங்க நிர்வாகத்தில் தொழிற்சங்கத்தையும் இணைத்துக்கொண்டது இந்த அரசாங்கம் மட்டுமே.

எதிர்க்கட்சி நாட்டை ஆண்ட காலத்தில் 40,000 பேரை வேலையிலிருந்து வெளியே தூக்கிவீசியது. அரச நிறுவனங்கள் மூடப்பட்டன. பல தொழிற்சங்கவாதிகள் கொல்லப்பட்டனர். ஜூலை வேலைநிறுத்தப் பேராட்டத் தலைவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குக் கூட இந்த அரசாங்கம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குகிறது.

No comments:

Post a Comment