Saturday, June 1, 2013

மக்களைப் பணயக்கைதியாக வைத்து பதவிகளைக் காப்பாற்றும் அரசியல்

வடமாகாண சபைத் தேர்தல் கதவைத் தட்டுகின்றது. இந்தத் தேர்தல் நடக்குமா அல்லது நடக்காதா என்று சந்தேகக் கேள்விகள் எழுகின்றபோதிலும் தேர்தல் நடப்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. மாகாண சபைத் தேர்தலின்போது வழமையான பாணியில் ஒப்பாரிப் பிரசாரம் செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதே தயாராகின்றது.

தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பாதிப்புகளைத் தேர்தல் மேடைகளில் பட்டியல் போடுவார்கள். பாதிப்புகள் இருப்பதை இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. தமிழ் மக்களுக்கு அது தெரியும். பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைக் காட்டுவதற்கே தலைவர்கள் தேவை. அந்த வழியைக் காட்டாமல் பாதிப்புகளைப் பட்டியல் போட்டு உசுப்பேற்றும் பேச்சுக்களைப் பேசுவது வாக்குகளுக்காகவேயொழிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவல்ல.

நான்கு வருடங்களாகக் கூட்டமைப்புத் தலைவர்கள் எதிர்ப்பு அரசியல் நடத்துகின்றார்கள். நிலம் பறிபோகின்றது. தமிழினம் அழிகின்றது என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசுகின்றார்கள். எடுத்ததற்கெல்லாம் மக்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றார்கள். இவற்றினால் ஏதாவது பலன் கிடைத்ததா என்று தமிழ் மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இராணுவப் பிரசன்னம், சிங்களக் குடியேற்றம், நில அபகரிப்பு என்று நீளமாகப் பட்டியல் போடும் கூட்டமைப்புத் தலைவர்கள் இவற்றுக்கெல்லாம் தாங்களே பிரதான பொறுப்பாளிகள் என்பதைத் தமிழ் மக்களிடமிருந்து கெட்டித்தனமாக மறைத்துவிடுகின்றார்கள். அரசாங்கத்தின் மீது முழுப்பழியையும் போட்டுத் தப்பித்துக்கொள்கின்றார்கள். சந்திரிகாவின் அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வரமுடியாமற்போனதற்கு இந்தத் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள். அந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ் மக்கள் இப்போது முகங்கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கமாட்டா.

புலிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வர முடியாத நிலையை உருவாக்கிய கூட்டமைப்புத் தலைவர்களே தமிழ் மக்களின் இன்றைய அவலங்களுக்கு முழுக்க முழுக்கப் பொறுப்பாளிகள். தமிழ் மக்களுக்குத் தாங்கள் செய்த துரோகத்தை மூடிமறைப்பதற்காக வீரவசனங்கள் மூலம் மக்களைத் திசைதிருப்பி ஏமாற்றுகின்றார்கள்.

தலைவர்களின் வீரவசனங்களில் மயங்கி ஏமாறுபவர்களாகத் தமிழ் மக்கள் இருந்தது போதும். தேசியவாதத் தலைவர்களால் தாங்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையும் இனப்பிரச்சினையின் தீர்வுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் இத்தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக இழந்தார்கள் என்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அறுபது வருடங்களுக்கு மேலாகக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தவறியதற்கான விளக்கத்தைத் தமிழ் மக்களுக்கு அளிக்கவேண்டிய கடப்பாடு தேசியம் பேசும் தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு. இச்சந்தர்ப்பங்களில் தாங்கள் விட்ட தவறுதான் தமிழ் மக்களுக்கு அவல வாழ்க்கையைக் கொடுத்திருக்கின்றதென்பது இவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் இத்தவறுகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு இடமளிக்கக்கூடாது என்பதால் ஆக்ரோஷமான எதிர்ப்பு அரசியலை நடத்தி மக்களைத் திசை திருப்புகின்றார்கள்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் பற்றி இன்று கூட்டமைப்புத் தலைவர்கள் அதிகம் பேசுகின்றார்கள். அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தால் இனப்பிரச்சினை தீந்திருக்கும் என்று ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தன் கூறினார். ஆனால், 1965இலும் 1972இலும் பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் சரத்துகளை நடைமுறைப்பத்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. தமிழ்த் தேசியத் தலைவர்கள் அவற்றைப் பயன்படுத்தவில்லை. அதன் பின்னர் கிடைத்த மற்றைய சந்தர்ப்பம் சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம். புலிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தமிழ்த் தலைவர்கள் இத்தீர்வுத் திட்டத்தை எதிர்த்தது தமிழ் மக்களுக்குச் செய்த மிகப் பெரிய துரோகம்.

இப்போதாவது தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதையில் செல்வதற்குத் தமிழ்த் தலைவர்கள் தயாராக இல்லை. எதிர்ப்பு அரசியல் நடத்தி அரசாங்கத்துக்கு எதிராக வசைபாடுவதன் மூலம் தங்கள் துரோகத்தை மறைப்பது தான் இவர்களின் நோக்கமாக இருக்கின்றதேயொழியத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதல்ல. பிரச்சினையின் தீர்வில் உண்மையாகவே அக்கறை உண்டென்றால் இதுவரையில் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும்.

இனப்பிரச்சினையாக இருந்தாலும் மக்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினையாக இருந்தாலும் அரசாங்கமே தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். வெளியிலிருந்து யாராவது தீர்வைக் கொண்டுவர முடியாது. எனவே, தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேசுவதைத் தவிர்க்க முடியாது. கூட்டமைப்புத் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேச விரும்பவில்லை. அரசாங்கத்துடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று மொட்டையாகக் கூறுகின்றார்கள்.

கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துபவர்கள் தந்தை செல்வாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்கள். பதிவு விடயத்தில் தந்தை செல்வாவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்றால் பேச்சுவார்த்தை விடயத்தில் பின்பற்றக்கூடதா?

கச்சேரியடிச் சத்தியாக்கிரகம் நடைபெற்ற வேளையில் அரசாங்கத்தின் சார்பில் அன்றைய நீதி அமைச்சர் சாம் பி.சி. பெர்னாண்டோ பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தைக்குப் போவது போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்று அமிர்தலிங்கமும் நாகநாதனும் எதிர்த்தார்கள். அப்போது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பின்வருமாறு கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு எந்தச் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதைக் கைவிடலாகாது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் என்பது தெளிவாகத் தெரியும் சந்தர்ப்பங்களிலும் பேச்சுவார்த்தைக்குப் போய் அது தோல்வியில் முடிவதைக் காண்பதே சிறந்தது. எடுத்ததற்கெல்லாம் தந்தை செல்வாவின் முன்மாதிரி பற்றிப் பேசும் தமிழ்த் தலைவர்கள் இந்த முன்மாதிரியைப் பின்பற்றத் தயங்குவது ஏன் என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்டுச் சிந்திக்க வேண்டும்.

அரசியல் தீர்வை நிராகரிக்கும் புலம்பெயர் அமைப்புகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே தேசியம் பேசும் தமிழ்த் தலைவர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வந்தால் புலம் பெயர் அமைப்புகளின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்துவிடும் என்று இவர்கள் அஞ்சுகின்றார்கள். அதனாலேயே பேச்சுவார்த்தையைத் தவிர்க்கின்றார்கள். புலம் பெயர் அமைப்புகளின் பாராட்டைப் பெறுவதற்கும் தங்கள் அரசியல் பதவிகளைக் காப்பாற்றுவதற்கும் இது சிறந்த வழி என்று கருதுகின்றார்கள்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறுவது பாரதூரமான விளைவுகளுக்கு வழிவகுத்துவிடும். தமிழ் மக்களின் அரசியலில் இது தான் நடந்தது. சந்தர்ப்பங்களை உதாசீனம் செய்த தலைவர்கள் சகல சுகபோகங்களுடன் வாழ்கின்றார்கள். தமிழ் மக்கள் துன்பங்களையும் துயரங்களையுமே அனுபவிக்கின்றார்கள். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த இன்றும் தலைவர்கள் தயாராக இல்லை. மக்கள் இப்போது விழிப்படையாவிட்டால் அடுத்த சந்ததிக்கும் இந்தச் சோகம் தொடரும்.

தலைவர்களின் வீரவசனங்களில் மயங்கி ஏமாறுபவர்களாகத் தமிழ் மக்கள் இருந்தது போதும். தேசியவாதத் தலைவர்களால் தாங்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையும் இனப்பிரச்சினையின் தீர்வுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் இத்தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக இழந்தார்கள் என்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மாகாண சபைத் தேர்தலின்போது வழமையான பாணியில் ஒப்பாரிப் பிரசாரம் செய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதே தயாராகின்றது. தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பாதிப்புகளைத் தேர்தல் மேடைகளில் பட்டியல் போடுவார்கள். பாதிப்புகள் இருப்பதை இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. தமிழ் மக்களுக்கு அது தெரியும். பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைக் காட்டுவதற்கே தலைவர்கள் தேவை. அந்த வழியைக் காட்டாமல் பாதிப்புகளைப் பட்டியல் போட்டு உசுப்பேற்றும் பேச்சுக்களைப் பேசுவது வாக்குகளுக்காகவேயொழிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவல்ல.

- சங்கர சிவன்

No comments:

Post a Comment