வடமாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்த மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடக்கை அபிவிருத்தி செய்யும் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தினூடாக மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், தொடர்ந்தும் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ள பாதுகாப்பு மற்றும் ஜனநாயக சூழல் காரணமாக மக்கள் எவ்வித அழுத்தங்களுமின்றி தமது உரிமையை அனுபவித்து வருகின்றனர். வடக்கை அபிவிருத்திசெய்வதற்கு திட்டமிட்ட செயற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அவர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தான் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த மாவட்டங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்புவழங்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நோக்கத்தை வெற்றிகொள்வது எதிர்பார்ப்பு அல்ல. 30 வருடங்களாக துயரத்தை அனுபவித்த மக்களுக்கு துரித நிவாரணத்தை வழங்குவதே தனது எதிர்பார்ப்பு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment