இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி நாடு சுதந்திரம் பெற்ற நாட்தொடக்கம் இன்று வரை இடம்பெற்று வருகின்ற அநீதிகள், துயரங்கள், அறவழியில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அன்று நடத்திய போராட்டங்கள், அது பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற வேண்டிய நிர்ப்பந்தங்கள் தொடர்பாக இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர்மட்டக்குழுவிடம் விபரமாக எடுத்துக் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக்குழவினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிப் போர், முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரும் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை பறிகொடுத்து பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமரமுடியாமல் பாரம்பரிய பிரதேசங்களை பெரும்பான்மை இனத்திடம் பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர்.
எல்லாரும் கைவிட்ட நிலையில் அனாதரவாக வாழ்கின்ற அவல நிலை பற்றியெல்லாம் அமெரிக்கத்தூதுக்குழுவின் முன்னால் ஆதாரபூர்வமாக முன்வைத்தோம் என்றார்.

No comments:
Post a Comment