Wednesday, June 26, 2013

13ஆவது திருத்தச் சட்டத்தை சாட்டாக வைத்து மகன் விமுக்தியை அரசியலிற்குள் நுழைக்க முயல்கின்றார் சந்திரிக்கா!-விமல்!

13ஆவது திருத்தச் சட்டத்தை துரும்பாகக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசாங் கத்தையும் பிரிப்பதற்காக அரசாங்க தரப்பு அமைச்சர்கள் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தூண்டிவிடுகிறார் என்றும், இவ்வாறு கட்சிக் குள் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம், மகன் விமுக்தி குமாரதுங்கவைக அரசியலிற்குள் நுழைப்பதற்கு சந்திரிக்கா முயற்சி செய்து வருகின்றார், என அமைச்சர் விமல் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள தேசிய சுந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் தொடர்பில் எமது நிலைப்பாடு உறுதியானதே. இந்த நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்கும் வரை எமது போராட்டம் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை,இந்தியாவுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் விடயத்துக்கு எதிராக இருந்தவர்கள் இப்பொழுது அதற்கு ஆதராவாக பேசுகின்றனர் என்றும், அமைச்சர்களான ராஜித்த மற்றும் ரெஜினோல்ட் குரே போன்றோர்கள் சந்திரிகாவின் கணவரின் கட்சியான மஹஜன கட்சியில் இருந்தவர்கள். அவர்கள் அன்றும் ஆதரவாக இருந்தார்கள் இன்றும் ஆதரவாகப் பேசுகின்றனர் என அமைச்சர் விமல் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே என்றும், ஒப்பந்தம் கைச்சாத்திட்டால் விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பார்கள் என்று சொல்லி இந்தியா மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியானது எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் செய்யும் தீர்மானத்திலேயே உள்ளது. அதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக ஐ.தே.க. செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாம் இது குறித்து ஜாதிக ஹெல உறுமய மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் நீக்கப்படும் வரை நாம் தொடர்ந்தும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment