தொழில்வாய்ப்புக்கு பொருத்தமானவர்களை உருவாக்க எமது நாட்டின் கல்வித்துறை தவறிவிட்டதாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சமகாலத்தில் வறிய நிலையில், கல்வியைப் பெறும் மாணவர்களுக்கு வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.
இதன்காரணமாக, நாட்டின் மாணவர்கள் சராசரியில் 22 வீதமானவர்களே, உயர்தரத்தில், விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப, கல்வியைத் தொடர்கின்றனர். ஏனையவர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறையில் கல்வி பயில்கின்றனர்.
அவர்களுக்கு தகுதிக்கேற்ற தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நாளைய எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. தொழில்வாய்ப்புகள் இருக்கின்றன, ஆனால் அதற்கான தகுதியுடையவர்களை இந்தக் கல்வித்துறை உருவாக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பாக சிறார்களும் பெண்களும் வன்முறைகளுக்கு உள்ளாகும் செய்திகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment