அபிவிருத்தியும் வேண்டாம்; அற்ப சலுகைகளும் வேண்டாம், சர்வதேசத்திடம்பேசி அரசியல் தீர்வைப் பெற்றுத் தருகிறோம் என்று யுத்தம் முடிவடைந்த பிறகு நடந்த மூன்று தேர்தல்களிலும் வாக்குறுதியளித்தார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். மூன்று வருடங்களுமாகி விட்டன. இவர்கள் சொன்னது ஒன்றும் நடக்கவில்லை. இப்போதும், இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சர்வதேசத்தின் அழுத்தம் அவசியம் என்னும் நாலாம் வாய்பாட்டைச் சொல்லிவிட்டுத் தங்கள் அரசியல் கடமை முடிந்ததாக ஓய்வெடுக்கிறார்கள்.
இதுவரை உருவாக்கிய சர்வதேச அழுத்தங்களை வைத்துக் கொண்டு இவர்கள் சாதித்து முடித்ததென்ன? இனி என்ன அழுத்தத்தை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? எப்போது எந்த மாதிரியான அழுத்தம் உருவாகி நமக்குத் தீர்வு வரப்போகிறது? என்ன மாதிரியான தீர்வு? என்று எதையுமே இவர்கள் சொல்லுவதில்லை. சர்வதேச அழுத்தம் என்பதை ஏறக்குறைய ஒரு மத நம்பிக்கையாகவே ஆக்கிவிட்டார்கள்.
கஷ்டங்களைச் சொல்லிப் புலம்புவோம்; அதற்கான தீர்வைக் கடவுள் தருவார் என்பது மாதிரியான மதப் பிரசாரகர்களாகவே மாறிவிட்டார்கள். சர்வதேசம் என்ன தரும்? எப்படித் தரும்? எப்போது தரும் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. இறை நம்பிக்கையில் கேள்விகளுக்கு இடமேது? சர்வதேச பக்தியில் உருகிப் பஜனை பாடிக்கொண்டிருந்தால், தன்னை நம்பித் தொழுதுகொண்டிருப்பவர்களிடம் என்றாவது ஒருநாள் கடவுள் வராமலா போய்விடப் போகிறார்?
சரி, சர்வதேசம் அழுத்தி, அரசாங்கம் எந்தத் தீர்வைத் தந்தால் இவர்கள் எடுப்பார்கள்? யோசித்துப் பார்த்தால், அரசாங்கம் தரும் எந்தத் தீர்வையும் இவர்களால் எடுக்க முடியாது என்பதையே விளங்கிக்கொள்ள முடிகிறது. அப்படி ஏதாவது இவர்களுக்கு முடியுமாக இருந்தால்தான், தீர்வை வரைந்தெடுத்துக்கொண்டு போய் சர்வதேசத்தை வலியுறுத்தி இருப்பார்களே! இவர்கள் மக்களுக்கு ஊட்டிவைத்திருக்கும் மிகைகற்பனைகள் ஆவே சங்களின் விளைவாக, இவர்கள் எந்தவொரு தீர்வை எடுத்தாலும் துரோகிகளாகிவிடும் ஆபத்திலிருக்கிறார்கள். இவர்களே வீசிய பூமராங் அரசியலின் விளைவு!
வெறுப்பும் பழிவாங்கும் உணர்ச்சியும் வீரப்பிரதாபங்களும் மறையாமல் இணக்கமும், முன்னேறும் வாழ்வும் எப்படிச் சாத்தியமாகும்? இதோ, இவர்களுக்காகவே இந்தப் புறநானூற்றுப் பாடல்.
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்ப்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
புறநானூற்றில், யாதும் ஊரே யாவரும் கேளிர்க்கு அடுத்த தற்கு அடுத்த பாட்டு (194) இது. பக்குடுகை நன்கணியார் பாடியது.
தீதும் நன்றும் பிறர்தந்து வருவதில்லை. இன்பமாக வாழ்வை அமைத்துக்கொள்வதோ அல்லது துன்பத்தில் உழலுவதோ நம்மிடம்தான் இருக்கிறது. பிறரைச் சாட்டிப் புலம்பிக் கொண்டிருப்பதால் எதுவும் நடப்பதில்லை என்பது உணர்த்தப்பட்ட பிறகு இந்தப் பாடல் வருகிறது.
ஒரு வீட்டில் சாவீட்டுப் பறையும் கண்ணீரும், இன்னொரு வீட்டில் கல்யாண மேளமும் துணையோடு கூடிமகிழ்தலுமாக படைக்கப்பட்டிருக்கும் இவ்வுலக இயற்கையானது கொடியதே. ஆதலால், இவ்வுலகின் தன்மையறிந்தோர் கெடுதிகளை மறந்து நல்லது நினைப்பதிலும் நல்லது செய்வதிலுமே கவனம் செலுத்துவர் என்கிறார் புறநானூற்றுப் புலவர்.

No comments:
Post a Comment