ஜெனீவா கூட்டத் தொடருடன் சனல் 4 இன் திருகுதாளம் மீண்டும் ஆரம்பம் குழந்தைகளைப் படுகொலை செய்ததும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததும் அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியதும் புலிகளேயன்றி அரசாங்கமல்ல என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நேற்றுத் தெரிவித்தார். எட்டு, பத்து வயதுகளையுடைய சிறுவர்களைப் பலாத்காரமாக பிடித்து ஆயுதப் பயிற்சி அளித்து ‘புரொய்லர் சிக்கன்கள்’ போன்று அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியவர்களும் புலிகளே என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.ஜெனீவாவில் மனித உரிமை பேரவை கூடும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு சனல் 4 நிறுவனம் இவ்வாறான காட்சிகளை வெளியிடுவதை அண்மைக்காலமாக வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. அதனால் அக்காட்சி குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
சில இணைய தளங்களிலும், பத்திரிகைகளிலும் நேற்று வெளியான சனல் 4 காட்சி குறித்து தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ஜெனிவாவில் மனித உரிமை பேரவை கூடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான காட்சிகளை வெளியிடுவதை சனல் 4 நிறுவனம் அண்மைக்காலமாக வழங்கமாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில்தான் இந்தக் காட்சியும் வெளியாகியுள்ளது.
புலிப்பயங்கரவாதம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தோடு முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அன்று முதல் அச்சம், பீதியின்றி அமைதியாகவும், சமாதானமாகவும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறான சூழ்நிலையில்தான் சனல் 4 இந்தக் காட்சியை வெளியிட்டிருக்கின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இற்றைக்கு நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன. இதன்படி இக்காட்சியை சனல் 4 என்ன நோக்கத்திற்காக வெளியிட்டுள்ளது என்பதை எவருமே இலகுவில் புரிந்து கொள்வர்.
சனல் 4 வெளியிட்டுள்ள சிறுவனைப் புலிகளே படுகொலை செய்து அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது போடமுயற்சி செய்துள்ளனர். இதனூடாக அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தவும் அவர்கள் எண்ணியுள்ளனர்.ஆனால் எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பதிலுமே குழந்தைகளைப் படுகொலை செய்ததே கிடையாது. பொறுப்பு வாய்ந்த அரசுக்கு அப்படியான தேவையும் ஏற்படாது. இதனை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகின்றேன்.
அதேநேரம் எமது அரசாங்கம் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கவில்லை. அவர்களை யுத்தத்தில் ஈடுபடுத்தவுமில்லை. மாறாக புலிகள்தான் 8, 10 வயதுடைய சிறுவர்களை பலவந்தமாகப் பிடித்து ஆயுதப் பயிற்சி அளித்து ‘புரொய்லர் சிக்கன்கள்’ போன்று யுத்தத்தில் ஈடுபடுத்தினர். அவர்களே குழந்தைகளை குரூரமாக கொலையும் செய்தனர். ஆனால் அரசாங்கம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களையே ஆயுதப் படைக்கு ஒழுங்கு முறையாக சேர்த்துப் பயிற்சி அளித்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றது. ஆகவே சனல் 4 ன் இச்செயல் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை என்றார்.
No comments:
Post a Comment