தனி ஈழம் கோரியும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் ஒள்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தண்டனை வழங்கவேண்டும், தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றதுடன் கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் குறித்து ஊடகங்களிடம் பேசிய தாயார் மாரியம்மாள் 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்த அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை மாவட்ட மதிமுக செயலாளர் தி.ப. சரவணன் இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மது அலி, மாநில மாணவர் அணிச் செயலாளர் கி.மு. ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment