இலங்கை விடயத்தில் தமிழக அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பரமணிய சுவாமி : 'முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார். தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்' என்று பொருளுரைத்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில் : 'இலங்கை குறித்த ஜெயலலிதாவின் தற்போதைய கருத்துகள் கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்கின்றன. ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அது பற்றி முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசின் உரிமை. தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் இலங்கை விவகாரம் பற்றி கருத்து சொல்கிறார்கள். அவர்கள், படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்' என்றார்.
இதேநேரம் தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிதானத்துடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வலியுறுத்தியுள்ளார். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்திய மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கமே அந்நாட்டுக்கான தேசிய கொள்கையை வகுக்கின்றது. கடந்த சில நாட்களாக இந்திய மத்திய அரசாங்கம் பலவீனமடையும் அதே வேளை மானில அரசாங்கங்கள் பலமடைந்து வருகின்றன. இதனால் இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைகள் மாநில அரசாங்கங்களுடன் இணக்க போக்குடன் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழகத்திலுள்ள ஈழம் நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலானோர் இவற்றிற்கு ஆதரவு இல்லையென நான் கருதுகின்றேன். அத்துடன் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியும், இவ்வார்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை அவதானிக்க முடிகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே ஆத்திரமூட்டப்படும் செயல்கள் இடம்பெறும் போது நாம் பொறுமையுடன் செயல்பட கூடிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. அத்துடன் நாம் இது தொடர்பில் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment