Tuesday, March 26, 2013

ஜெயலலிதாவைச் சந்திக்க முனைகிறார் மாதுலுவ சோபித்த தேரர்!

கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவை சோபித்த, பானகல உபதிஸ்ஸ, கிரம விமலஜோதி, பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானஸார, தினியாவல பாலித்த, முருத்தேட்டுவ ஆனந்த ஆகிய பௌத்த மதகுருமார், பௌத்த மதகுரு இந்தியாவில் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டமை குறித்து உரையாடுவதற்காகவும், தொடர்ந்தும் அவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காவும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும், டீஎம்கே கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதியையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பௌத்த துறவிகளிற் சிலர் இலங்கை - இந்திய ஆணையாளர் நாயகம் அசோக் கே. காந்தைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த வேண்டுகோளை தான் இந்திய அரசுக்கு அறிவிப்பதாக இந்திய ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாக பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானஸார தேரர் தெரிவித்துள்ளார்.

மேற்படி பயணத்தை மேற்கொள்ள முடியுமானால், ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் சந்தித்து இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்காதிருக்கும் வண்ணம் உரையாற்றவுள்ளதாகவும் ஞானஸார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த துறவிகளும், சிங்களவர்களும் இனவாதிகள் அல்லர் என்பதையும், இலங்கை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மிகவும் புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் என்பதையும், சிங்களவர்கள் இனவாதிகள் என்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள செய்தி வெறும் போலியானது என்றும், அவ்வாறான எண்ணங்களை அவர்களிருந்து களைப்பதற்கு ஆவன செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் ஞானஸாரர்.

(கேஎப்)

No comments:

Post a Comment