மட்டக்களப்பில் கடந்த 16 வருடங்களாக நான் விகாராதிபதியாக இருந்து இன ஐக்கியத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் சமய பணி செய்து வருகின்றேன். அதற்கிணங்க மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காக மட்டக்களப்பு நகர நுழைவாயில் அமைந்துள்ள பிள்ளையாரடி பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விளம்பர பலகை ஒன்றை போடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதியை கேட்டு அந்த விண்ணப்பித்தினை அதன் கொழும்பு தலைமையகத்திற்கு அனுப்பியதுடன் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் அனுப்பியுள்ளேன். ஆனால், இதுவரைக்கம் அதற்கான எந்த பதில்களோ அனுமதியோ வரவில்லை என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப் படுத்துவதற்காகவே அந்த புத்தர் சிலையை வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். ஆனால் நான் இன்னும் புத்தர் சிலையை வைக்கவில்லை. அதற்கான அனுமதி இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. இலங்கையில் எங்கும் எவரும் தங்கு தடையின்றி தமது மத வழிபாட்டு தளங்களை அமைக்கமுடியும். இலங்கையில் மதவழிபாட்டு தளங்களை அமைக்கமுடியாது என யாரும் கூறமுடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதப்பிரச்சினையை இனங்களுக்கிடையே தோற்றுவிக்க முயல்கின்றனர். அதனடிப்படையிலேயே கடந்த புதன்கிழமையன்று மக்களை பிழையாக வழிநடாத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். எனவே மக்களை பிழையாக வழிநடாத்த வேண்டாமென நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இவர்கள் மக்களை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் திசை திருப்ப முயசிக்கின்றனர் என குறித்த பௌத்த பிக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் வழியில் அனைத்து இடங்களிலும் நான் புத்தர் சிலைகளை நிறுவுவேன். நாட்டில் புத்தர் சிலைகளை நிறுவி நாட்டை பிடிக்க போகின்றோம் என்று கூறுகின்றனர். இது ஒரு பௌத்த நாடு, நாங்கள் நாட்டை பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் நிலை எதற்கு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர்.
அப்படியானால் கண்டி, கரலியத்த உடிஸ்பத்துவ எனும் இடத்தில் இந்து கோவிலுள்ளது அங்கு எத்தனை தமிழ் குடும்பங்கள் உள்ளன. அதே போன்று திகன கெங்கல்ல எனுமிடத்தில் இந்து கோவிலுள்ளது அங்கு எத்தனை தமிழ் குடும்பங்கள் உள்ளனர் என நான் கேட்கவிரும்புகின்றேன். அங்குள்ள கோவில்களை ஒரு போதும் அகற்றுமாறு நாங்கள் கூறவில்லை.
நான் ஒரு பௌத்த பிக்கு என்ற வகையில் விகாரைகளை அமைப்பது புத்தர் சிலைகளை வைப்பது மக்களுக்கு நல்ல போதனைகளை செய்வதுதான் எனது வேலை அந்த வகையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி இன நல்லுறவை கட்டி வளர்க்க நான் பாடுபட்டு வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment