Monday, May 27, 2013

கொலையா அல்லது தற்கொலையா? எனது பெண்ணுக்கு துப்பாக்கி இயக்க தெரியாது இக்கொலையை கட்டாயம் ....

ஜோர்தான் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று கடந்த 6 ஆம் திகதி மரணமடைந்த நிலையில் குறித்த பணிப்பெண்ணின் சடலம் ஜோர்தான் நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டு நேற்று அதிகாலை விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தது. விமான நிலையத்தில் உறவினர்களினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது கறுவாக்கேணியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் மரணத்தில் வீட்டு எஜமான் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவத்த நாகேந்திரன் மங்களேஸ்வரி தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எனது குடும்பத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பிள்ளைகள். கணவன் நாளாந்த கூலித் தொழில் செய்பவர். அவரது உழைப்பு போதாது. பிள்ளைகளுக்கு வீடு கட்ட வேண்டும். என குடும்பத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே 2008ஆம் ஆண்டு நான் அந்நாட்டிற்கு முதலில் பணிப்பெண்ணாக சென்றிருந்தேன். அங்கு எனது வீட்டுக்காரர் என்னை நன்றாக கவனித்தார்கள். எனக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.

நான் மட்டும் உழைப்பது போதாது அம்மாவுடன் சேர்ந்து தானும் அங்கு வந்து உழைக்க வேண்டும் என விரும்பி தனது 18ஆவது வயதில் 2010ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் திகதி எனது மகள் மற்றுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக தொழில் புரிய 2ஆவது மகள் காந்திமதி அந்நாட்டிற்கு வந்திருந்தார்.

அவர் அமெரிக்க நாட்டவர் ஒருவரது வீட்டிலே தொழில் புரிந்தார். அந்த வீடு அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசம். வீட்டு எஜமானருக்கு இரண்டு ஆண்கள் உட்பட மூன்று பிள்ளைகள். வீட்டில் பிள்ளைகளோ மனைவியோ நிரந்தரமாக தங்குவதில்லை. இடையிடையே வந்து போவார்கள். அநேகமாக வீட்டில் எஜமானுடன் அவரது 2ஆவது மகன் தங்குவது வழக்கம. பெண்களே தங்குவது இல்லை. அந்த வீட்டில் ஏராளமான நாய்களும் பூனைகளும் வளர்க்கப்படுவதால் மகள்தான் அவற்றை பராமரிக்கவும் வேண்டும்.

அந்நாட்டில் நான் தங்கியிருந்த நாட்களில் மகளுடன் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு இருந்தது. மகள் தான் எஜமானாலும் அவரது மகனாலும் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி அழுவார். ஒரு தடவை முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளது. கையில் பிளேட்டினால் கீறப்பட்டுள்ளது. பீங்கானால் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என தான் அனுபவித்த கொடுமைகளை சொல்லி அழுத மகள் எதிர்வரும் ஜுலை மாதம் 3வருட ஒப்பந்தம் முடிந்தாலும் நாட்டிற்கு போக முடியாது எனக் கூறி தன்னை மிரட்டுவதாகவும் என்னிடம் கூறுவார்.

நான்கு வருடங்களில் அந்நாட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து நாடு திரும்புவதற்கு முன் மகளையும் அழைத்த போது தனது ஒப்பந்தம் எதிர்வரும் ஜுலையில் முடிவதால் அதன் பின்னர் வருவதாக கூறியிருந்தார். ஆனால் மகள் வரவில்லை அவரது சடலம்தான் வந்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்திலிருந்து வந்த தொலைபேசி தகவலில் ஆரம்பத்தில் மகள் இறந்து சடலம் வைத்தியசாலையில் இருப்பதாக மட்டும தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாம் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த 6 ஆம் திகதி வீட்டில் சிறிய பிரச்சினையொன்றில் அவரே சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். என தெரிவிக்கப்பட்டது.

என்னை பொறுத்தவரை எனது மகள் தனக்குத் தானே வெடி வைத்து மரணமடைந்ததாக கூறப்படுவதை ஏற்க முடியாது. அவர் துப்பாக்கியால் சுடுவது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவரால் எப்படி தனக்குத் தானே வெடி வைக்க முடியும். ஏற்கனவே, இருவரும் கொடுமைக்காரர்கள். மகள் கொடுமைப்படுத்தப்பட்ட அடையாளங்கள் கூட அவரது முகத்திலும் தலையிலும் உள்ளன. எனவே என்னை பொறுத்தவரை வீட்டு எஜமான் மீதும் அவரது மகன் மீதும் தான் சந்தேகம் உள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment