Friday, May 24, 2013

யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை

யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை அவர்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.

எனவே பிரிவினை வாதத்தை மீண்டும் தோற்றுவிக்காத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதுவே இன்றைய தேவையாக உள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் பல்வேறு துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதனை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது 13ஆம் திருத்தச்சட்டத்தையும் அதிகார பரவலாக்கல் பற்றியும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

13ஆம் திருத்தச்சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த சட்டத்தின் மூலமாக இதுவரையில் நல்லிணக்கம் ஏற்படவில்லை. எனவே அந்த சட்டமானது பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டுக்கு பொருந்தாதவொன்றாகும். ஆகையால் அதனை விடுத்து நாட்டின் அரசியல் அமைப்பில் திருத்தத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

பிரிவினை வாதத்தை மக்கள் விரும்பவில்லை. ஆனால் சில தரப்பினர் தமது தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்காக அதனை விரும்புகின்றனர். அதன் காரணமாகவே நாட்டிற்குள் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.

மூன்று தசாப்த காலங்கள் நாட்டில் நீடித்து வந்த யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது. ஆனால் அந்த யுத்த வெற்றியால் வேறெதனையும் இதுவரை வெற்றி கொள்ள முடியவில்லை. எதற்காக யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதோ அந்த இலக்கை இன்னும் அடையவில்லை.
நாட்டிற்கு வெளியே இருக்கும் பலர் இன்னும் எமது நாட்டை நேசிக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தற்போது நாட்டில் இல்லை.

ஆகையால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தமிழ் மக்களுடன் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலமே பிரிவினை வாதத்தை முற்றாக ஒழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
அண்மையில் பொதுபலசேனா அமெரிக்கா சென்றிருந்தது. அதன் போது அங்கு வாழும் இலங்கையர்களுடன் இலங்கையின் உண்மை நிலையினை எடுத்துக்கூறினோம். அங்கு தமிழர் சிங்களவர் என்ற வேறுபாட்டை நாம் பார்க்கவில்லை. மாறாக புலம் பெயர்ந்துள்ள தமிழ் சிங்கள மக்கள் பலரையும் சந்தித்து பேசினோம் என்றார்.

No comments:

Post a Comment