Friday, May 3, 2013

வலிகாகம் மக்களுக்காக நாங்க ரெடி நீங்க ரெடியா? வாருங்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்.

வடமாகாண சபைத்தேர்தல் நெருங்கியுள்ளது. இந்நிலையில் வரும் தேர்லுக்கான பிரச்சாரமாக வலிகாகம் மக்களின் காணிப்பிரச்சினையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையில் எடுத்துள்ளது என்பது யாவரும் அறிந்த விடயம். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதியான முறையிலும் மக்களுக்கு இறுதி தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் செயற்பட வேண்டும் என போரினால் பாதிக்கப்பட்ட மக்களமைப்பு வேண்டியுள்ளது.

அந்த அமைப்பு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

வலிவடக்கு காணிப்பிரச்சனையில் சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு நாம் தயார். பின்வாங்கியது கூட்டமைப்பு!!

மக்களின் பிரச்சனையில் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகிறது. கூட்டமைப்பின் செயற்பாடு வலி வடக்கு மக்களை நிரந்தரமாக காணியற்றவர்களாக்கும். வலிவடக்கு மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பாக இப்பிரச்சனை அரசாங்கத்தால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு இன்று அந்த மக்கள் காணியற்றவர்களாக்கப்பட்டிருப்பதற்கு இந்தியத்தூதுவர், மற்றும் இலங்கை அரசாங்கத்திடமும் கண்டனங்களை தெரிவித்தும் இருக்கின்றோம்.

இந்த நிலையில் காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல் வெளியானவுடன் வலிவடக்கு மீள்குடியேற்றக்குழு அறிவித்த 29.04.2013 கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதி முடிவு ஒன்று எம்மால் எடுக்கப்பட வேண்டும் என்று எமது அமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மாவைசேனாதிராஜா, சுரேஷ், சுமத்திரன், சிறீதரன் ஆகிய எம்.பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதானது, வலிவடக்கு மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

நிலமீட்பு போராட்டத்திற்கு வராதுவிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் போல பேசினார்களே தவிர, இந்த நிலமீட்புக்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதற்கு எமது போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் சார்பாக நான் தயார் என்று பகிரங்கமாக அறிவித்து, அதற்கு அங்கு கூடியிருந்த பெருந்தொகையான மக்களும், இளைஞர்களும் ஆதரவு தெரிவித்தும் கூட அதற்கு எம்.பிகள் எவரும் முன்வரவில்லை.

இது தொடர்பாக மாவை சேனாதிராஜாவும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் அறிவிக்கும் போது இப்போது கூட்டத்திற்கு அணிதிரண்ட மக்களின் தொகை போதாது என்றும், அடுத்த கூட்டத்தில் 5,000ற்கு மேற்பட்ட மக்கள் அணிதிரண்டால் இப்பிரச்சனையை ஐ.நா வரை கொண்டு போக உதவியாக இருக்கும் என்றும், வலிவடக்கு மக்கள் அனைவரும் காணி உறுதிகளுடன் வந்து தமது வலிவடக்கு பிரதேச சபையில் பதிவு செய்தால் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடரப்போவதாகவும் கூறுகிறார்கள்.
நாம் முன்வைக்கும் கேள்விகள் இவைதான்..

1. போடப்படும் காணி உரிமை தொடர்பான வழக்குகள் வலிவடக்கு மக்களுக்கு சாதகமாக அமையுமா?

2. மனிதாபிமான ரீதியில் அணுகவேண்டிய பிரச்சனை சட்டரீதியில் அணுகுவதால் ஏற்படும் தாமதத்தை எவ்விதம் தடுப்பது?

3. சட்டம், நீதித்துறை என்பன அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளபடியால் இதில் தமிழ் மக்கள் வெற்றியடைய முடியுமா?

4. காணி உறுதி தொலைந்தவர்களும், வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்களும் இதில் ஈடுபடுவது எப்படி?

5. வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது எதிர்காலத்தில் கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்படாவிட்டால் வழக்காடிக்கொண்டிருக்கும் மக்களின் நிலை என்ன?

6. வழக்கில் சாதகமான நிலை கிடைக்காவிட்டால் என்ன முடிவு எடுப்பது?

7. வழக்கு நடைபெறும் காலம் வரை இம்மக்களின் தொழில், வருமான முயற்சிகளுக்கு என்ன செய்வது?

8. வழக்கு போடப்பட்டால் வலிவடக்கு மக்களுக்கு தற்போது வேறு இடங்களில் பெறக்கூடிய வீட்டுத்திட்டங்களிற்கு பாதிப்பு ஏற்படாதா?

9. வலிவடக்கில் பாதிக்கப்பட்ட 30,000 மக்களில் 1,000 பேரைக்கூட ஒரு வர்க்கப்போராட்டத்திற்காக திரட்ட முடியாத நிலையில் வலிவடக்கு பிரச்சனைக்கு என ஒரு வெகுஜன போராட்டத்தை நடத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

10. வலிவடக்கில் இதற்கு முன்னர் மாவை சேனாதிராஜாவினால் போடப்பட்ட வழக்கினால் தான் அப்பகுதியில் ஒருபகுதி விடுவிக்கப்பட்டதாக மாவை சேனாதிராஜா முன்பு கூறியிருந்தார். அது உண்மையானால் நீங்கள் ஏன் முழுப்பகுதியையும் விடுவிக்குமாறு முன்பு வழக்கு தொடரவில்லை?

11. சட்டத்தின் மூலம் இதனை தீர்க்க முடியும் என்று நீங்கள் கருதினால் ஏன் வெலியோயா, முள்ளிக்குளம், சம்பூர், சேருவல, கந்தளாய், முல்லைத்தீவின் பல இடங்கள் இது போன்ற இன்னும் பல ஆக்கிரமிக்ப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீட்பதற்கு உடனடியாக வழக்குகளை போடவில்லை?

12. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிக்குமாறு ஜே.வி.பி வழக்கு தொடர்ந்து வடக்கு கிழக்கை பிரித்தபோது ஏன் நீங்கள் அதற்கெதிராக வழக்கு தொடரவில்லை?

13. யாழ்ப்பாண எம்.பிகள் தொகை 11இல் இருந்து 9 ஆக குறைத்தது அறிவிக்கப்பட்டபோது ஏன் வழக்கு தொடரவில்லை?

14. வடக்கு, கிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சகல காணிகளையும் விடுவிக்குமாறு கோரி, ஏன் இதுவரை வழக்கு தொடரவில்லை?

15. ஸ்ரீலங்காவின் சட்டத்தினை நீங்கள் மதிப்பதாக இருந்தால், நீங்களே சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அலுவலர்களாக பொறுப்பெடுத்து, அதாவது ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் எம்.பிகளாக உள்ள நீங்கள் அமைச்சர் பொறுப்புக்களை எடுத்து, மக்களுக்கு நேரடியாக சேவையாற்ற முன்வந்தால், இப்போது உங்களை சேவை செய்ய விடாமல் தடுக்கும் இராணுவமும், பொலீசும் உங்களுக்கு சலூட் அடிக்க மாட்டார்களா? உங்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாதா?

இவற்றுக்கெல்லாம் உங்களுக்கு விடை தெரியும் ஆனால் நீங்கள் பதிலளிக்க மாட்டீர்கள், உங்களுக்கு ஸ்ரீலங்கா சட்டமும் தெரியும், தமிழ் மக்களின் மனநிலையும் தெரியும். அமைச்சுப் பதவியை நீங்கள் எடுத்தால் தமிழ் மக்களின் பல பிரச்சனைகளுக்கு நீங்கள் முகங்கொடுக்க வேண்டிவரும். வாய் வீரர்களான நீங்கள் செயலில் இறங்கி மக்களிடம் நல்ல பெயரை பெறமுடியாது என்று ஒரு தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு, மறுபுறம் உங்களுக்கு இருக்கும் உள்ளுர் மட்ட, சர்வதேச அந்தஸ்தினை மக்களுக்கு பயன்படுத்தி பயனடைய வைப்பதற்காக உங்கள் எம்.பி பதவிகளை இராஜினாமா செய்யாமல் அப்படி செய்தால் தமிழ் மக்களின் அனுதாபமும் உங்களுக்கு கிடைக்கும். உலகத்தின் கவனமும் தமிழ் மக்கள் மீது திரும்பும். விரைவில் தீர்வும் கிட்டும். இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்நபோது, உங்கள் 22 பேரில் ஒரு ஆளாவது இந்த முடிவை எடுத்திருந்தால் தமிழ் மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையை 2009ஆம் ஆண்டு நான் முன்வைத்தபோது, முழுப்பதவி காலத்தையும் பூர்த்தி செய்வதற்கு முதல் இராஜினாமா செய்தால் எம்.பி பதவி மூலம் பென்சன் கிடைக்காது என்று நீங்கள் பின்வாங்கினீர்கள்.

எது எப்படி இருந்தாலும் உங்களை தங்களின் மீட்பர்கள் என்று பெரும்பாலன தமிழ் மக்களும், நீங்கள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று உலக நாடுகளும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இந்த ஒளிவட்டத்தினை நாம் சிதைக்கப்போவதில்லை.ஆனால் தொடர்ந்து உங்களது பதவிகளை சுயலாபத்திற்காக பயன்படுத்தினால், எம்மை நாடி வரத்தொடங்கியுள்ள முற்போக்கான தமிழ் இளைஞர்களுக்காக புதிய ஒளிவட்டத்தினை நாம் உருவாக்குவோம்.

இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்

No comments:

Post a Comment