Tuesday, August 20, 2013

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்செயலுக்கு மரண தண்டனை? அரசாங்கம் மீண்டும் அலசல்!

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்செயலுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் மீண்டும் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆலோசனை சட்டமா அதிபர் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு 6 மாதங் கள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் ஆலோசனையை சட்டமூலமாக மாற்றிய மைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விளக்கம் கோரவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக தற்போது வழங்கப்படும் தண்டனைகள் போதுமானதாக இல்லை. தற்போதைய சட்டத்திற்கமைய சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகளின் போது சிறுவர்கள் வாலிப வயதையடைந்ததும் வழக்குகளை வாபஸ் பெறும் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

இதனால் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரித கதியில் நிறைவு செய்து கடும் தண்டனை வழங்கும் விதத்தில் சட்டமூலத்தை மாற்றியமைக்கும் தேவை உருவாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்களுக்கே கூடுதலான பொறுப்பு காணப்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டே 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வதை தடை செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment