(சுன்னாகம் நிருபர்)1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை நடாத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நிறுவனம் அந்த நேரத்தில் அறிவித்த வட்டி வீதங்களால் கவரப்பட்ட வட பகுதி மக்கள் தமது கோடிக்கான பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்தனர். அவர்களில் பலதரப்பட்ட மக்கள், அதாவது தமது பிற்கால சீவியத்துக்கென பணத்தைச் சேமித்து வைத்திருந்தோர், பிள்ளைகளின் திருமணத்துக்காக பணம் வைத்திருந்தோர், காணி பூமிகளை விற்றுப் பணம் வைத்திருந்தோர் என பல வகையினர் அடங்கியிருந்தனர்.ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இந்த நிதி நிறுவனம் தனது காரியாலயத்தை இழுத்து மூடிவிட்டு பொதுமக்கள் வைப்பிலிட்ட பணத்துக்கு கையை விரித்துவிட்டது.
அதனால் பலர் ஒன்றும் செய்ய முடியாது பரிதவித்ததுடன், சிலர் அதனால் ஏற்பட்ட மனமுடைவதால் மரணித்த சம்பவங்களும் நிகழ்ந்தன. பலர் தமது பணத்தை மீளப்பெற எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டோர் சேர்ந்து ஒரு சங்கத்தை அமைத்து செயல்பட முற்பட்டாராயினும், அதுவும் பலனளிக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய துணிகரமான நிதி மோசடி இதுதான்.
பிற்காலத்தில் சிலர் இது சம்பந்தமாகப் புலிகளின் உதவியை நாடிய போதிலும், புலிகள் அது சம்பந்தமாக அக்கறை செலுத்தாததுடன், அந்த நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளைப் பாதுகாக்கவும் செய்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்ணியின் முன்னாள் தலைவரும், உடுப்பிட்டித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான காலஞ்சென்ற மு.சிவசிதம்பரம் அவர்கள் இந்தப் பண மோசடி சம்பந்தமாக அப்போதைய சட்டமா அதிபருடன் பேசி சில நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தாராயினும், அவர் பின்னர் இறந்துவிட்டதால் அம்முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஈ.சரவணபவன் ஒரு முக்கிய நிர்வாகியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் மீதும் பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டது.
அவர் இந்த நிதி நிறுவனத்தில் மோசடி செய்த பணத்தை வைத்துத்தான் இன்று அவர் நடாத்தி வரும் ‘உதயன்’ பத்திரிகையை ஆரம்பித்தார் என்ற குற்றச்சாட்டுகளும் பொதுமக்களால் சுமத்தப்பட்டது. அவரை ‘இன்ரபோல்’ என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனம் தேடி வருவதாகவும் பரவலாகக் கதைகள் இருந்தன. அவரும் சில காலம் பொதுமக்களின் கண்களில் படாமலும், யாழ்ப்பாணம் வருவதைத் தவிர்த்தும் இருந்தார்.
காலம் தாழ்த்தியாயினும் அரசாங்கம் இப்பொழுது இந்த நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க முன்வந்ததை, இந்த நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்டவர்கள் மட்டுமின்றி, வட பகுதிப் பொதுமக்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மீதும் விசாரணை நடாத்தப்படுமா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரிய வரவில்லை. இருந்த போதிலும,; ‘சப்றா ஃபினான்ஸ்’ என்றவுடன் மக்கள் சரவணபவனை நினைப்பதாலும், அவர் இந்த நிறுவனத்தில’ முக்கியமான பதவியொன்றை வகித்ததாலும், அவரை நிச்சயமாக விசாரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அபிப்பிராயமாக உள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தனது மைத்துனர் ந.வித்தியாதரனை களமிறக்க சரவணபவன் எம்.பி முற்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்த விசாரணை வர இருப்பது, அவருக்கு ஒரு சோதனை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமின்றி வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக் காத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இது ஒரு சோதனை என்றுதான் கூற வேண்டும்.
நன்றி தேனீ
No comments:
Post a Comment