வடக்கு மாகாணத் தேர்தலை இலக்குவைத்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. கட்சியின் குழுவினர் வடக்கில் பிரசார சுற்றுப் பயணம் ஒன்றை ஆரம்பித்து நேற்று யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். வடக்கு மாகாணத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் போட்டியிடும் என்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடகமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவிகருணாநாயக்க, டி.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில்விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் வடமாகாண சபைத்தேர்தலை செப்ரெம்பர் மாதத்தில் நடத்துமாறு தமது கட்சி அரசிடம் கோருவதாகவும் அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை வைப்பதன் மூலம் முழுமையான ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு அரசாங்கம் எட்டு மாகாண சபைகளில் தேர்தலை நடாத்தி முடித்துவிட்டது மீதி இருப்பது வடக்குத் தேர்தல் மட்டுமே அரசாங்கம் இந்தத் தேர்தலை நடாத்துவதற்கு முன்பு குறிப்பாக சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டும்.
அதாவது பொலிஸ் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு போன்றவை இதனையே எல்.எல்.ஆர்.சியும் வலியுறுத்தியுள்ளது. என்றும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியுடனும் வடமாகாண தேர்தல் குறித்து அரசு கலந்தா லோசிக்க வேண்டும் என்றும், பொது ஆளுநர் ஒருவரையும் அரசு நியமிக்கவேண்டும் அவ் வாறு நியமிக்கப்படாவிட் டால் சுதந்திரமான தேர்தல் நடைபெற மாட்டாது.
தேர்தலிற்கு முன்னர் வெளி நாட்டுக் கண்காணிப்பாளர்களை இங்கு கடமையாற்ற அரசு அனுமதிக்கவேண்டும். இவ்வாறு அரசு செயற்பட்டாலே சுதந்திரமான தேர்தலை வடக்கில் நடாத்தமுடியும். அவ்வாறு சுதந்திரமான குழுக்களின் பங்களிப்பு டன் தேர்தல் நடத்தப்பட்டால் அதனை நாம் ஏற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயன் பத்திரிகை அச்சகம் தாக்கப்பட்டுள்ளது. இதை நடாத்தியது சிவில் உடையணிந்த பாதுகாப்புத்தரப்பினர் என்ற செய்தி தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்வாறான சூழலில் உண்மையான ஜனநாயக சூழலை எதிர்பார்க்க முடியாது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசிக் கட்சி பலதரப்பினரையும் சந்தித்துக் கலந்தாலோசிக்கவே நான்கு நாள் விஜயம் மேற் கொண்டு இங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்ததுடன், இந்த விஜயத்தில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏனைய சட்டப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாட எண்ணியிருப்பதாகவும் தெரிவித்தார். அதேவேளை நேற்று மாலை வடமராட்சியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். மாகாணசபை தேர்தலில் வடமராட்சிப் பகுதியின் வேட்பாளர் தெரிவு பற்றியும் விலைவாசி பற்றியும், மின்சாரக் கட்டண உயர்வு பற்றியும், வடமராட்சிப் பகுதி மக்களின் கருத்துப் பற்றியும் அங்கு கலந்து ஆலோசிக் கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் பேசிமுடிந்ததும் ஊடகவிய லாளர்கள் வெளியேற்றப்பட்டு அதன் பிறகு மந்திர ஆலோசனை நடைபெற்றது. அதன்பிறகு ப.நோ.கூ. சங்க கிளைக் கடையை (மாலுச்சந்தி) பார்வையிட்டார். பொதுமக்களின் வியாபார ஸ்தாபனத்தையும் பார்வையிட்டார். பொதுமக்களின் குறை நிறையும் கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment